tamil kavithaigal

காதல்

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!


காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை

பிரிந்தும் பிரியாத நினைவுகள்











இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்



நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!

தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்

இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்

சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்

அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்

மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!

இரண்டற கலத்தலென்பது..




கிழியாத வானம் போல்
பிரியாத உறவு
இந்த இணைபுறாக்களுடையது

ஒன்றாய் பறக்கையிலும்
ஒன்றின் இறகு
விசிறித்தரும் காற்றே
மற்றொன்றின் சுவாசம்

இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்

இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்

மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்

இன்று காலையில் பறந்த
உண்டிவில் கல்லொன்று
ஒன்றின் உயிரை பறித்துப்போக,
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது
தனியான மற்றொன்று

இறக்கும் வரை இணைந்தேயிருக்கும்
தெய்வீக காதலரின் முன்னால்
இவையோ இறந்தபின்னும்
இணைந்திருந்தன

அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!

காதலர் தினக் கவிதை

























அன்பே!
நீ வேண்டும் எனக்கு

இல்லாமல் போனால்
இறக்க வேண்டிய சுவாசமாய்
வாழ்வின் முழுமைக்கும்
நீ வேண்டும் எனக்கு

உலகின் பாதைக்கெல்லாம்
ஒளிதரும் சூரியனாய்
எனக்கேயான பாதைகளுக்கு
நீ வேண்டும் எனக்கு

தனிமையின் தாகத்தில்
வானம் பார்க்க
கொட்டிப்போகின்ற சிறுமழையாய்
நீ வேண்டும் எனக்கு

சோர்வில் அண்ணாந்து
பார்க்கின்ற பொழுதெல்லாம்
சொர்க்கத்தின்
சாயல் காட்டிநிற்கும்
பரந்துபோன வானமாய்
நீ வேண்டும் எனக்கு

பனி இரவில்
தீயின் வெப்பம் ஏந்தி
இரவை இதமாக்க நீ
வேண்டும் எனக்கு

உயிர்ப்புல்வெளியில்
சிதறிக்கிடக்கும்
பனித்துளிகளை
கொட்டிப்போகும் பின்னிரவாய்
நீ வேண்டும் எனக்கு

அதிகாலை காதுக்குள்
இசையில் கூச்சமூட்டும்
ஜன்னலோர குருவிகளாய்
நீ வேண்டும் எனக்கு

தோல்வி நேரத்திலும்
வெற்றியின் களிப்பு தரும்
தோட்டத்துப்பூக்களாய்
நீ வேண்டும் எனக்கு

மொட்டைமாடி பாய்விரித்து
நட்சத்திரம் எண்ணிக்கிடக்கும்
நிலவுக்குளியலில்
நீ வேண்டும் எனக்கு

உன் இன்னொரு பிள்ளை நானுமாய்
என் இன்னொரு தாய் நீயுமாய்
சாவிற்கு சற்று தள்ளியும் கூட
நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு!

வந்தாலும் வரலாம்

இந்த அமைதியான இரவில்
பிரிந்திருக்கிறோம் நாம்

சாரளத்தின் வழியே
நான் காண்கிண்ற இந்த நிலா
உனதறையில் தற்சமயம்
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும்

இங்கே திரைச்சீலை அசைக்கின்ற
இதே தென்றல் உனதறையின்
திரைச்சீலைகளிடத்தும்
அதிகாரம் கொண்டிருக்கும்

கண்கள் வெறுமனே
நட்சத்திரங்களை கண்டுகொண்டிருக்க
நினைவுகளில் என்னை
சுமந்தபடி இருக்கும் உன்னைப்போலவே
நானும்..

இரவும்
விடியலை நோக்கி பயணப்பட்டு
வெகுதூரம் வந்தாகிவிட்டது
இனியேனும்
நினைவுகளில் அசதியால்
கொஞ்சம் தூக்கம்
வந்தாலும் வரலாம்

No comments:

Post a Comment